மாற்றங்களுக்கு உள்ளடங்கியதே காலம் என்பதற்கு தகவல் தொழில் நுட்ப துறையும் விலக்கல்ல. சில வருடங்களுக்கு முன்பு தகவல் பரிமாற்ற கணினி துறையில் முன்னணியில் இருந்தது மைக்ரோசொப்ட் தயாரிப்புகள். விண்டோஸ் கணினி இயங்குதளங்கள், விண்டோஸ் மொபைல் இயங்குதளங்கள் என்று மைக்ரோசொப்ட்டின் ஆளுமை அதிகம். அதே போல் மொபைல் தயாரிப்பு துறையில் நம்பர்.1 நோக்கியா. அடித்து கொள்ள ஆள் இல்லை என்று வீறு நடை போட்டன.
ஆனால் இது எல்லாம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வெளியிடும் வரை மட்டும்தான். ஐபோனின் மிகப்பெரிய வளர்ச்சி, ஐபேட் வரவு என்று இல்லங்களில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகள் சந்தைக்கு வேட்டு வைத்து வருகின்றன. ஈமெயில் பார்ப்பது, இணையதளங்கள் வாசிப்பது, வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது என்று சராசரி பயனரின் அனைத்து தேவைகளையும் கொண்டு செல்லும் இடமெல்லாம் நிவர்த்தி செய்து விடுகின்றன ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன் வகையறாக்கள்.

ஸ்மார்ட் போன்கள், டேப்லெட் பிசிக்கள் என்று மொபைல் சாதனங்களின் வளர்ச்சி கணினிகளின் தேவைகளை குறைத்து வருவது உண்மை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து கூகிள் தனது ஆண்டிராயிட் மொபைல் இயங்குதளம் மூலம் மொபைல் துறையில் குறிப்பிட்ட சந்தையை பெற்று உள்ளது. ஆண்டிராயிட் இயங்குதளத்தில் இயங்கக் கூடிய மொபைல் சாதனங்கள் அதிகமான அளவில், குறைந்த விலையில் வரத்துவங்கி உள்ளன.

இது இப்படியிருக்க மொபைல் சாதனங்கள் தயாரிப்பில் ராஜாவாக இருந்த நோக்கியா ஆப்பிள் ஐபோன், கூகிள் ஆண்டிராயிட் வருகைக்கு பிறகு மாபெரும் சரிவை சந்தித்து உள்ளது. ஐபோன் ஓஎஸ், கூகிள் ஆண்டிராயிட், விண்டோஸ் மொபைல் போன்ற இயங்குதளங்களைப் போல் மொபைல் போன்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தனது தயாரிப்புகளுக்கு தனியான இயங்குதளங்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.
நோக்கியா மெமோ (Maemo) , சாம்சங் படா (Bada), இன்டெல் மொப்ளின் (Moblin) என்று இயங்குதளங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் வரவேற்பு குழப்ப நிலையிலேயே உள்ளன. நோக்கியா தனது மெமோ இயங்குதள தயாரிப்பை இன்டெல் மொப்ளினுடன் இணைத்து இரண்டு நிறுவனங்களும் தற்போது மீகோ (Meego) என்ற பெயரில் புதிய மொபைல் இயங்குதளத்தை உருவாக்கி வருகின்றன.
உயர்தர ஸ்மார்ட் மொபைல் போன்கள் தயாரிப்பில் ஆப்பிள் ஐபோன் முன்னணி வகிக்கிறது. கூகிள் ஆண்டிராயிட் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் மொபைல் போன்களை எச்டிசி (HTC), சாம்சங் (Samsung), சோனி எரிக்சன் (Sony Ericsson) போன்ற பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. பல சீன நிறுவனங்களும் குறைந்த விலையில் ஆண்டிராயிட் மூலம் இயங்கும் மொபைல் போன்களை வெளியிட்டு வருகின்றன. விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் மொபைல் போன்களை எச்டிசி (HTC), சாம்சங் (Samsung), சோனி எரிக்சன் (Sony Ericsson) உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதிக வரவேற்பை பெற்றது ஆப்பில் ஐபோன் , கூகிள் ஆண்டிராயிட்.
ஸ்மார்ட் போன்கள் நிலை இப்படியிருக்க டேப்லெட்(Tablet) பிசிக்களின் புரட்சி நெட்புக் (Netbook) எனப்படும் சிறிய அளவிலான லேட்டாப் கணினிகளின் சந்தையை விழுங்கி விட்டன. ஆப்பிள் ஐபேட் டேப்லெட் பிசி வெளியிட்ட பின், கூகிள் ஆண்டிராயிட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டேப்லெட் பிசிக்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் சாம்சங் கேலக்சி டேப் (Samsung Galaxy Tab), டெல் ஸ்ட்ரிக் (Dell Streak), ஆலிவ் பேட் (Olive Pad) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
உயர்தர மொபைல் போன்கள் சந்தையை ஆப்பிள், கூகிள் நிறுவனத்திடம் இழந்த நோக்கியா, குறைந்த விலை மொபைல் போன்கள் சந்தையை மலிவான விலையில் வரும் சீன தயாரிப்புகளில் இழந்து தடுமாறி வருகிறது. நோக்கியா நிறுவனத்திற்கு இப்படியொரு நிலை வரும் என்பதை எவரும் கணித்திருக்கவில்லை.
இந்நிலையிலிருந்து மீண்டெழ நோக்கியா நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் கைகோர்த்து கொள்வது என்று முடிவு செய்து உள்ளன. நோக்கிய நிறுவன ஸ்மார்ட் போன் தயாரிப்புகளில் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்த மைக்ரோசாப்ட் நோக்கியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக மைக்ரோசாப்ட் நோக்கியாவிடம் ஒரு பில்லியன் டாலர் அளித்துள்ளதாக செய்திகள் உலவுகின்றன.
இதன் மூலம் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தை அதிக பயனர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. ஆப்பிள் ஐபோன், கூகிள் ஆண்டிராயிட் போன்றவற்றின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கலாம் என்று நோக்கியா கணிக்கிறது. இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் மொபைல் சந்தையில் புத்துணர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
6 comments:
gud review!!!
senthil,doha
மிக்க நன்றி செந்தில்.
நோக்கியா குதிரை (iphone , ஆந்ட்ரொஇட்) யோட போட்டி போட ஒரு கழுதையை (MS ) தேர்ந்தெடுத்தது துரதிர்ஷ்டமே.
@அஹோரி
சரியான ஒப்பீடு! :)
நோக்கியா தடுமாற்றத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. அவர்களது மீகோ (Meego) இயங்குதள தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
HTC, Samsung முன்பு அதிகமாக விண்டோஸ் மொபைல் போன்களை வெளியிட்டு வந்திருந்தாலும் இப்போது ஆண்டிரயிட் போன்கள் மூலமே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளார்கள்.
இவர்களது இந்த நோக்கியா + மைக்ரோசாப்ட் கைகோர்ப்பை பார்க்கும் போது ஏற்கனவே இணைய தேடல் சந்தையில் கூகிளை எதிர்க்க மைக்ரோசாப்ட் யாகூவோடு கை கோர்த்து ஒன்றும் முடியாமல் போனதுதான் நியாபகம் வருகிறது.
good article.
@ponmalar
Thank you
Post a Comment